அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தமிழக அரசை கண்டித்துசென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

மாநில செயலாளர்கள் பிரமிளா சம்பத், கராத்தே தியாகராஜன், முன்னாள் பாஜக ஊடக பிரிவு மாநிலதலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், தனசேகர் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தமிழக அரசுக்குஎதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், அதிமுகவினருக்கு எதிராகவும் பாஜக நிர்வாகிகள் மேடையில் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியதாவது: அண்ணாமலைக்கு வழக்கு பற்றி எதுவும் தெரியாது என திமுகவினர் நினைக்கின்றனர். அவர் சட்டத்தை படித்துவிட்டு தான் அரசியலில் நுழைந்திருக்கிறார். வடமாநிலத்தவர்கள் குறித்து தவறாக பேசியவர்கள் திமுகவினர் தான்.

நமக்கும், வடமாநிலத்தவர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுகவினர் பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொய் வழக்கு: பிரிவினையை ஏற்படுத்திவிட்டு, தற்போது, இதற்கு பாஜகவினர் தான் காரணம் எனக்கூறி இந்த பிரச்சினையை திசை திருப்புகின்றனர். அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இதுவரை அவரை கைது செய்ய அருகில் கூட போனது இல்லை. ஏனென்றால், இது பொய் வழக்கு.

எந்த ஊழல் இல்லாமலும் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்குமட்டுமே உள்ளது. 2026 தேர்தலில்தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது என அவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் 2026-ல் பாஜக தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE