கிருஷ்ணகிரி: “தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும்; தாமரை மலர்ந்தே தீரும்” என கிருஷ்ணகிரியில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் மாவட்ட பாஜக அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர், 75 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து அங்கு நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய பாஜக அலுவலகங்களைத் திறந்து வைத்தார்.
இக்கூட்டத்தில் வெற்றிவேல், வீரவேல் என முழங்கங்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: "தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 10 மாவட்டங்களில் இன்று புதிதாக பாஜக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவிற்கு அலுவலகம் திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கான முன்னெடுப்பை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதன்படி 887 மாவட்டங்களில் 290 மாவட்டத்தில் பாஜக அலுவலகம் நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 150 இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகங்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.
திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேகலாயாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பிரதமர் மோடியின், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டதே ஆகும். கேரளா மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே குஸ்தி நடக்கிறது. திரிபுராவில் இருகட்சிகளும் தோழமையுடன் போட்டியிடுகின்றனர். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழகத்தில் பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால், தாமரை மலர்ந்தே தீரும். 1951, 52-ல் எந்த நோக்கத்திற்காக பாஜக தொடங்கப்பட்டதோ, அது 2019-ல் நிறைவேறி உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக திகழ்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் நம் நாடு 10-வது இடத்தில் இருந்தது. தற்போது மோடியின் வளர்ச்சி திட்டங்களால், 5வது இடத்தை பிடித்துள்ளது. 200 ஆண்டுகளாக 5வது இடத்தில் இருந்த பிரிட்டன், தற்போது 6வது இடத்தில் உள்ளது.
இதே போல், டிஜிட்டல் பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியா பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக 9 ஆண்டுகளுக்கு முன்பு 92 சதவீதம் செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தி வந்தோம். தற்போது 97 சதவீதம் செல்போன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவன செல்போன்கள் மேக் இன் இந்தியா-வாக உள்ளது. இதேபோல் மருத்துவத்துறையிலும் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இங்கிருந்து தரமான மருந்துகள் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆட்டோமொபைல் தயாரிப்புகள் ஜப்பான் நாட்டை மட்டுமே சார்ந்து இருந்த காலம் மாறி, தற்போது இந்தியா முன்னேறி உள்ளது.
தமிழ் மொழி, கலாச்சாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். சித்தா மருத்துவத்திற்கு உரிய தேசிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்றுத்தர வேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.31,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது. மக்கள் அரசியலால் பாஜக வளர்ந்து வருகிறது.
நான் ஏற்கெனவே கூறியது போல், திமுக என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்துதான். நான் கூறியது போல் தற்போது திமுக குடும்ப அரசியல் என்பதற்கு, அவரது மகன் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரியவில்லை.
தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்விற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago