“வட மாநிலங்கள் போல தமிழகத்திலும் பராமரிப்பு இல்லாத சுங்கச் சாவடிகளை உடனே மூடுக” - விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: "வட மாநிலங்களில் பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. அதேபோல் தமிழகத்திலும் நெடுஞ்சாலை பராமரிப்பு இல்லாத சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடுவதோடு, சுங்கக் கட்டணங்களையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தைவிட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, பெட்ரோல், டீசல் விலை, சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

தற்போது சுங்கக் கட்டணமும் மேலும் உயத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சாமானிய மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். சாலை வரி, வாகனங்களுக்கான காப்பீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மக்கள் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், நெடுஞ்சாலைகளில் உள்ள சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளன. பாஃஸ்டேக் முறை கொண்டு வந்த பிறகும் சுங்கச் சாவடிகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழலில் கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?

வட மாநிலங்களில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. அதேபோல் தமிழகத்திலும் நெடுஞ்சாலை பராமரிப்பு இல்லாத சுங்கச்சாவடிகளை உடனடியாக மூடுவதோடு, சுங்கக் கட்டணங்களையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் மீது மென்மேலும் சுமையை திணிக்காமல், சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE