பாஜக - அதிமுக பிரச்சினைக்கு தேசிய தலைமை தீர்வுகாணும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக, அதிமுக இடையிலான பிரச்சினைகளுக்கு, தேசிய தலைமை தலையிட்டு தீர்வுகாணும் என்று அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறினார். பாஜக மகளிரணி சார்பில், அனைத்து மாவட்டத்திலும் தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் 10 பெண்களைத் தேர்ந்தெடுத்து, மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநிலத்தலைவர் உமாரதி ராஜன், பொதுச் செயலாளர் நதியா, பொறுப்பாளர் பிரமிளா சம்பத், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, அதிமுக பலமான கூட்டணியாகத்தான் இருந்து வருகிறது. வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். கடந்த சில நாட்களாக பாஜக-அதிமுக இடையே சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதில் தேசிய தலைமை தலையிட்டு, உரிய தீர்வுகாணும். வரும் மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எங்களது கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்கள், மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்தது வருத்தம் அளிக்கிறது.

சில சமயங்களில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கிடையே சலசலப்புகள் ஏற்படுவது வழக்கம். அதிமுகவில் நிர்வாகத் திறன் உள்ளவர்களும், பாஜகவில் இளமைத் துடிப்புடன் செயல்படக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அதில் சில இளைஞரணி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுத்துள்ளனர்.

கூட்டணி என்பது முழுவதும் தேசிய தலைமை எடுக்கக் கூடியமுடிவு. தற்போது தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. அரசியலில் பல்வேறு சவால்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக சவால்கள் உள்ளவ. எனவே, அரசியலில் பெண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE