பாஜக நிர்வாகிகளுக்கு எதிர்கருத்து கூறுவதை அதிமுக தலைவர்கள் தவிர்க்க வேண்டும்: பழனிசாமி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக நிர்வாகிகளின் கருத்துகளுக்கு எதிர் கருத்து கூறுவதை அதிமுக தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது.

தற்போது அதிமுக- பாஜக இடையே கருத்து மோதலும், இரு தரப்பு தலைவர்களின் உருவப்படம் எரிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைப்பது, திறமையான வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், ‘‘மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் உள்ளது. தேர்தல் பணிகளை இன்று முதலே தொடங்க வேண்டும். திமுக அரசு மீது மக்களிடம் உள்ள அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

பாஜக தலைவர்கள் குறித்தும், அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்தை கூறுவதையும் அதிமுக தலைவர்கள் தவிர்க்க வேண்டும்’’என்று பழனிசாமி அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பழனிசாமி வழங்கியுள்ளார். அதன்படி செயல்படுவதற்கான உத்வேகத்தை மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கும், கட்சி வெற்றி பெறுவதற்காக பாடுபட்ட மாவட்ட மற்றும் தலைமைக் கழக செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளில் சில சலசலப்புகள் வரும்போது, தேசிய நலன் கருதி இக்கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE