சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு என்பதை தெரிவித்து, வரும் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப உள்ளதாக அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
தமிழக அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் வரும் 20-ம் தேதியும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் வெளியிடப்படும் திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த மசோதாவை தொடர்ந்து கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
மேலும், இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்தும் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது.
» செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
கூட்டத்துக்குப் பின்னர், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் சில சந்தேகங்களைக் கேட்டபோது, நேரிலேயே தெளிவான விளக்கம் தந்தோம்.
ஆனால், அந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர், கடந்த 6-ம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியபோது, சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, உரிய விளக்கங்களை அளித்து, புதிய சட்டத்தை அரசு கொண்டுவர எந்த தடையும் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சட்டம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால், அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறுகிறார்.
மாநிலப் பட்டியலில் பொது அதிகாரம், பொது சுகாதாரம், கேளிக்கை மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் ஷரத்துகளின் அடிப்படையில் சட்டமசோதா இயற்றி, நாங்கள் ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், திறன் விளையாட்டைக் குறிப்பிட்டு, அதை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தை நிறைவேற்ற எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை தெரிவித்து இதை நாங்கள் ஆளுநருக்கு அனுப்புவோம். வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத்தை கொண்டுவர உள்ளோம். பேரவையில் இது தொடர்பாக உறுப்பினர்கள் கூறும் புதிய கருத்துகள் சேர்த்துக் கொள்ளப்படும். ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல அவசியம் இல்லை.
இந்த மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால், அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை. நாங்கள் மாநிலப் பட்டியலில் உள்ள 34-வது ஷரத்தின்படிதான் இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். இந்த சட்டத்தைக் கொண்டுவர எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே தெலங்கானா மாநிலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளது. நாங்கள் கொண்டுவரும் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மற்ற மாநிலங்களும் தடை செய்ய வேண்டும்.
ஆளுநர் ரவியா? அண்ணாமலையா?: இது தொடர்பாக தமிழக அரசு, ஆளுநருக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என்று கேட்கிறீர்கள். ஆளுநர் கேட்ட விளக்கங்களை நான் தந்துள்ளேன். தற்போது ஆளுநராகப் பதவி வகிப்பது அண்ணாமலையா? ரவியா? ஆளுநர் எங்களிடம் கேட்ட விளக்கம், அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அண்ணாமலையிடம் இந்த ரகசியங்களை ஆளுநர் விவாதிக்கிறாரா? ஆன்லைன் சூதாட்ட தடை குறித்த மசோதா கிடப்பில் போடப்பட்டிருந்த சில மாதங்களில், சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 12 பேர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago