ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் ரகுபதி

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அதில், மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை மீண்டும் இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்றைய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், "ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும். இந்த தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். நாங்கள் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்று சட்டத்தை இயற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம். சட்டத்தில் உள்ளதை, திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைதான் ஆளுநர் கேட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. அதன்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து தரப்பினரின் கேட்டுதான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 95 சதவீத பேருடன் ஆதரவுடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இந்த சட்டம் ஆளுநரிடம் இருந்த காலத்தில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

பின்புலம் என்ன? - தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இச்சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

பின்னர், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி இதை கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதன் அடிப்படையில், ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு, இந்த மசோதா கடந்த அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்து சட்டம் அமலானது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ, வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள், விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதையடுத்து, அக்டோபரில் நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றாக, அக்.19-ம் தேதி சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. பிறகு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிச.2-ம் தேதி ஆளுநரை சந்தித்து, வலியுறுத்தினார். இதற்கிடையே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் ரவி, சந்தித்துப் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.

சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ள ஆளுநர், மசோதாவில் போதிய தரவுகளை சேர்த்தும், சில திருத்தங்களை செய்தும் அனுப்புமாறு தெரிவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்