இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவு - #WeWantGroup4Results ட்ரெண்டிங்கை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

பின்னர், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர கால அட்டவணையில் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில், ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடக்கோரி #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் நேற்று ட்ரெண்டானது.

இதன் எதிரொலியாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிட்ட விரிவான செய்திக்குறிப்பின்படி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE