ஓசூர் பகுதியில் கொத்தமல்லி விலை சரிவு: ரூ. 4-க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குறைந்த நாட்களில் அதிக வருவாய் ஈட்டும் காய்கறி பயிர்களான பீன்ஸ், கேரட் , தக்காளி, புதினா, கொத்தமல்லி, கீரை வகைகளை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கிறது.

குறிப்பாக கொத்தமல்லியின் தேவை ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதால் சந்தையில் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பும், விலையும் கிடைக்கும். இந்நிலையில், தற்போது திருமணம் உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் குறைவாக உள்ளதால், கொத்தமல்லி தேவையும் குறைந்துள்ளது. அதேநேரம் ஓசூர் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், கடந்த மாதம் ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையான கொத்தமல்லி கடந்த சில நாட்களாக ரூ.4 முதல் ரூ.10 வரை விலை குறைந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால், அறுவடை கூலி போக்குவரத்து செலவுக்குக் கூட வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விலை குறைந்த நிலையில், ஓசூர் அருகே உளியாளம் கிராமத்தில் அறுவடை செய்த கொத்தமல்லித் தழையை அருகில் உள்ள நிலத்தில் வீசும் விவசாயி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE