ஈரோடு கிழக்கு வேட்பாளர் செந்தில் முருகன் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ்  

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது, செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கே.எஸ்.தென்னரசு அதிமுக வேட்பாளராக தேர்வு பெற்று அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர் செந்தில் முருகன் தனது மனுவை திரும்பப் பெறுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எனினும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு முன்பே, பரிசீலனையின்போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் செந்தில் முருகன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE