இரவல் ஆளுநர் வேண்டாம்: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து எம்எல்ஏ வெளிநடப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்து ஆளுநர் தமிழிசை உரையாற்றும்போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, "நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் - இரவல் ஆளுநர் வேண்டாம்" என போஸ்டரை காண்பித்து வெளிநடப்பு செய்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அறிவுறுத்தல் படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.

இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ. 1000 கோடி அதிகம். வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி இன்று (மார்ச் 9ம் தேதி) காலை 9. 45 மணிக்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்ற ராஜ்நிவாஸிலிருந்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தார்.

அதையடுத்து ஆளுநர் தமிழிசைக்கு அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. பேரவைத் தலைவர் செல்வம், பேரவைச் செயலர் தயாளன் ஆகியோர் ஆளுநரை வரவேற்று மையமண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அங்கு பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் தமிழிசை அமர்ந்தார். அவர் அருகே பேரவைத் தலைவர் செல்வம் அமர்ந்தார்.

பின்னர் பாரதி வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார். அப்போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு எழுந்து நின்று கையில் இருந்த போஸ்டரை காண்பித்தார். அதில், "மத்திய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமித்திடு, வேண்டாம் வேண்டாம் இரவல் ஆளுநர் வேண்டாம்"என்று எழுதியிருந்தது. அதை பார்த்த பேரவைத் தலைவர் செல்வம் அமரக் கூறினார். ஆனால் அவர் நெடுநேரம் நின்றிருந்தார். பின்னர் பேரவையிலிருந்து எம்எல்ஏ நேரு வெளி நடப்பு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE