சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது; தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இரு காரணங்களின் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டதாகும். முதலாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஒதிஷா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து 03.08.2021-ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டம் வாய்ப்புகளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
» ''விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்'' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
» ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது: மு.க. ஸ்டாலின்
மற்றொருபுறம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த சர்ச்சை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக ‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு’’ என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது.
இரண்டாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ரவி உறுதியாக நம்பியிருந்தால், கடந்த அக்டோபர் மாதம் 19-ம் நாள் சட்டம் இயற்றி ஆளுனருக்கு அனுப்பிய உடனேயே திருப்பி அனுப்பியிருந்திருக்கலாம். அவ்வாறு அனுப்பியிருந்தால் உடனடியாக தமிழக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கும். அப்படி இரண்டாவது முறையாக சட்டமுன்வரைவை நிறைவேற்றியிருந்தால் அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 142 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தது ஏன்? அப்படியானால், அதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு இதே ஆளுநர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்று ஆளுநர் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி வினா எழுப்புவது ஏன்?
2021ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 18 பேர் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டனர். அந்த 18 பேரின் தற்கொலைக்கும், அவர்களின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததற்கும் தமிழக ஆளுநர் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவை அனைத்தையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது ஒரு வகையில் நல்லது தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை திருத்தத்துடனோ, திருத்தம் இல்லாமலோ சட்டப்பேரவை மீண்டும் இயற்றி அனுப்பும் போது அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும். அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அதனால் தான் இதை நல்லது என்கிறேன்.
எனவே, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கடசிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20-ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago