வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வறுமை, வாழ்வாதாரம் போன்ற காரணங்களால் வெளி மாநிலங்களுக்கு வந்து, எந்தப் பணியையும் செய்ய முன்வரும் தொழிலாளர்களை, மாநில வரையறைக்குள் அடைப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

தமிழகத்தில் வணிகம், உற்பத்தி, கட்டுமானத் துறைகள் மட்டுமின்றி, உழவுத் தொழில் வரை வெளி மாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. தமிழகத்தை உற்பத்தி நிறைவான மாநிலமாக மாற்ற, வெளிமாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம். எனவே, வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. இதை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய தீர்வு காண்போம். மேலும், வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உதவியாக இருக்கும்.

வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தமாக தவறான கருத்துகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநில காவல் துறை தலைமையிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE