தமிழக மீனவர்களின் மீன்பிடிப்புக்கு கடற்பரப்பு குத்தகை: இந்தியாவின் கோரிக்கையை ஏற்குமா இலங்கை?

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைக்காக இலங்கை கடற்பகுதியை குத்தகைக்குவிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 2004 முதல் 2016 வரை பல்வேறு கட்டங்களாக டெல்லி, சென்னை, கொழும்பு ஆகிய இடங்களில் நடந்தன.

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, தமிழக விசைப்படகு மீனவர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட மீன்பிடிமுறைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்து வருவதாகவும், இதனால் இலங்கை கடற்பகுதியின் மீன்வளம் அழிவதுடன் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர்.

இந்த மீன்பிடி முறைகளை மாற்றி கொள்ள மூன்றாண்டு காலம் அவகாசமும், இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்வதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால், இவை நடைமுறைப்படுத்தப்படவே இல்லை.

இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜெய்சங்கர் முயற்சி: அப்போது, தமிழக – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை காண ஜெய்சங்கர் முனைப்பு காட்டினார். ''இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு குத்தகை அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்தார்.

எல்.முருகன் - டக்ளஸ் சந்திப்பு: இந்த கோரிக்கை இலங்கையில் முக்கிய விவாதப் பொருளானது. இந்த குத்தகை முறைக்கு இலங்கை வட மாகாண மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து 2 நாட்டு மீனவப் பிரச்சினை குறித்தும், இதனை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி, "தமிழக மீனவர்களுக்கு குத்தகை மூலம் அனுமதிப் பத்திரம் வழங்கலாம்.

அதன்மூலம், இலங்கை கடற்பரப்புக்குள் வரும் தமிழக மீனவர்களின் படகுகளின் எண்ணிக்கையை வரன்முறைப்படுத்த முடியும்.அதேசமயம் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது. மேலும் அனுமதிப் பத்திரம் கொடுப்பது என்றால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் எவ்வளவு தூரம் வரலாம்.

இந்த அனுமதிப் பத்திரம் மூலம் கிடைக்கும் பணத்தை இலங்கை மீனவர்களுக்கு பிரித்துக் கொடுக்கலாமா? அதை இலங்கை மீனவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக – இலங்கை மீனவர்களின் நீண்ட கால மீன்பிடிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு இருநாட்டு அரசுகளும் முயற்சி மேற்கொண்டிருப்பது தெளிவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்