பாஜக ஐ.டி. பிரிவில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் ராஜினாமா

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேலும் 13 நிர்வாகிகள் நேற்று ராஜினாமா செய்துள்ளனர். பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சிடிஆர்.நிர்மல்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜகவில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பின்னர், சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஒரத்தி. அன்பரசு தலைமையில், 2 மாவட்டதுணைத் தலைவர்கள், 10 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் ஒரத்தி.அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம். ஆகவே ராஜினாமா செய்கிறேன். நிச்சயமாக திமுகவில் இணையமாட்டேன். திமுகவை விமர்சிக்கவே பாஜகவில் இருந்து விலகுகிறேன். என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வருபவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிடிஆர்.நிர்மல்குமாரின் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரி வித்துள்ளார்.

பாஜக மறுப்பு: இந்நிலையில், பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர், ‘‘சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.கே.சரவணன் மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து விலகவில்லை. அதுமட்டுமல்ல, 10 மாவட்டச் செயலாளர்கள் விலகி இருப்பதாக சொன்னதும் தவறு. அவர்கள் மாவட்டச் செயலாளர்களே இல்லை’’ என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE