சென்னை | ரூ.369 கோடி மதிப்பில் 3 புதிய பாலங்கள்: அமைச்சர்கள் நேரு, உதயநிதி அடிக்கல் நாட்டினர்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம், தண்டையார்ப்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் ரூ.369 கோடியில், 3 புதிய பாலங்கள் கட்டும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட கணேசபுரம் சுரங்கப் பாதையின் மேல் ரூ.142 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலப் பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர். முன்னதாக, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை அருணாசலம் சாலையில் ரூ.9.55 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

ரூ.430 கோடியில் கழிப்பறை சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு அடிப்படையில், 372 இடங்களில் ரூ.430 கோடி மதிப்பில் புதிய கழிப்பறைகள் கட்டுதல், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளைப் புதுப்பிக்க, அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தனியார் நிறுவனங்களுடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE