சென்னையில் மகளிர் தின கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில், காமராஜர் சாலையில் உள்ள அவ்வையாரின் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர்பிரியா, மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித் துறைச் செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மகளிருக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி கேக் வெட்டி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, மிக்ஸி, கிரைண்டர், தையல் இயந்திரங்கள் மற்றும் 1,000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, டி.ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ் உள்ளட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மகளிரணிச் செயலாளர் பா.வளர்மதி செய்திருந்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்தில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட ரயில்
பெண் ஓட்டுநர்கள் (பெண் லோகோ பைலட்கள்).

தமாகா சார்பில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில், கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, சாதனை மகளிருக்கு விருது வழங்கினார். தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில், மகளிர் முன்னேற்றம், பாலின சமத்துவம் தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று, தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும், மகளிரணி நிர்வாகியின் மகள்கள் இருவருக்கு ஊக்கத்தொகை வழங்கினர். ராயப்பேட்டையில் உள்ள அமுமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சிறைத் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி அறிவுறுத்தலின்படி, அனைத்து மகளிர் சிறைகளிலும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மருத்துவ அமைப்புகள் சார்பில் எலியட்ஸ் கடற்கரையில் வாக்கத்தான் நடைபெற்றது. இதில், முன்னாள் சர்வதேச ஓட்டப் பந்தய வீராங்கனை சைனி வில்சன், தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஜெயராணி காமராஜ், செயலாளர் குந்தவை சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில்,
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தமிழக அரசின் டிட்கோ மற்றும் சிட்கோ
நிறுவனங்களில் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன்,
​​​​​​சென்னை வடக்கு மண்டல காவல் துறை டிஐஜி ஆர்.வி.ரம்யா பாரதி ஆகியோரை
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வரவேற்றார்.

தலைவர்கள் வாழ்த்து: திக தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், பாரிவேந்தர் எம்.பி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் மகளிர் தின வாழ்த்து கூறினர்.

இலவச மருத்துவ முகாம்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. விழாவில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வரவேற்புரை ஆற்றினார். தமிழக அரசின் டிட்கோ மற்றும் சிட்கோ நிறுவனங்களில் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், சென்னை நகர வடக்கு மண்டல காவல்துறை டிஐஜி ஆர்.வி.ரம்யா பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பாஸ்போர்ட் அலுவலக பெண் ஊழியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் உரையாற்றினர்.

மேலும், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து பெண் ஊழியர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE