ஆன்லைன் ரம்மி தடை மசோதா: 2-வது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை, தமிழக அரசிடம் சில விளக்கங்கள் கேட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காத நிலையில், அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.

அவசர சட்டத்தில் இடம்பெற்றிருந்த அதே அம்சங்கள்தான், சட்ட மசோதாவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அது தொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள்ளாக விரிவான விளக்கம் அளித்திருந்ததாக தமிழக சட்டத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த சட்ட மசோதா தமிழக ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE