திருச்சி: ஆசிய பசிபிக் நாடுகளில் 20 லட்சத்துக்கும் குறைவான பயணிகளைக் கையாளக்கூடிய விமானநிலையங்களில் சிறந்த விமானநிலையமாக திருச்சி சர்வதேச விமானநிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து சர்வதேச விமானநிலைய கவுன்சில் (ஏசிஐ) சார்பில் தலா 3 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 4 முறை ஆய்வு செய்து ஓராண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
விமானநிலைய உள்நுழைவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், விமான நிலையத்திலுள்ள வசதிகள், தரமான உணவு மற்றும் குளிர் பானங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், விமானநிலைய சுற்றுச்சூழல் உள்ளிட்ட 32 கேள்விகளுக்கு பயணிகளிடமிருந்து பதில்களைப் பெற்று, அதனடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை சர்வதேச விமான நிலைய கவுன்சில் வெளியிட்டு வருகிறது.
இதன்படி, 2022-ம் ஆண்டுக்கான பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கியுள்ள ஆசிய பசிபிக் நாடுகளில் 20 லட்சத்துக்கும் குறைவான பயணிகளைக் கையாளக்கூடிய விமானநிலையங்களில், சிறந்த விமானநிலையமாக திருச்சி சர்வதேச விமானநிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமானநிலைய இயக்குநர் சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: ஆசிய பசிபிக் நாடுகளில் 20 லட்சத்துக்கும் குறைவான பயணிகளை கையாளக்கூடிய விமானநிலையங்களில் திருச்சி விமானநிலையத்தை சிறந்த விமானநிலையமான சர்தேச விமானநிலைய கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.
அடுத்தகட்டமாக, இங்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அடுத்தடுத்த ஆய்வுகளில் 20 லட்சத்துக்கும் மேல் பயணிகளைக் கையாளக்கூடிய விமானநிலையங்களில் பட்டியலில் திருச்சி சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
விமானநிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளில் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ராணுவத்திடமிருந்து 145 ஏக்கர், மாநில அரசிடமிருந்து 345 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
இதில் மாநில அரசு முதற்கட்டமாக 280 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தித் தருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
விமானநிலைய புதிய முனையக்கட்டுமானப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க இந்திய விமானநிலைய ஆணையக்குழுமத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், அதற்குள்ளாக முடித்துவிடுவோம் என்றார்.
சுங்கத் துறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: திருச்சி விமானநிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக இருந்தபோதிலும், சுங்கத் துறையினரின் நடவடிக்கைகள் பெரும்பாலான பயணிகளுக்கு அதிருப்தி அளிப்பதாகவும்,சோதனை என்ற பெயரில் பயணிகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விமானநிலைய இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து, இப்பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago