கணினிவழிக் கல்வி... கரகாட்டம் போன்ற பாரம்பரியக் கலைகள் கற்க பயிற்சி... என நவீனத்தையும், பாரம்பரியத்தையும் ஒருசேரக் கற்றுத் தருவதால் விருதுநகர் மாவட்டம் சூலக்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
பெற்றோரின் மோகம்
தனது பிள்ளையும் ஆங்கில வழிப் பள்ளியில் பயில வேண்டும் என்று பெற்றோரிடம் இருக்கும் பரவலான மோகத்தின் காரணமாகவே, ஏராளமான மாணவர்கள் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பெற்றோர்களின் இந்த எண்ணத்தை புரிந்து கொண்டு எங்கெல்லாம் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் இப்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சூலக்கரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கணினி வழிக் கல்விக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இங்கு 209 மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு தொடக்கப் பள்ளியில் 200 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது இங்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்பதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 100-க்கும் கீழே இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200-க்கு மேல் உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் பலர் தற்போது இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சிப் போக்கு எவ்வாறு சாத்தியமானது என்பது பற்றி தலைமை ஆசிரியர் சத்தியபாமா கூறியதாவது:
நவீன தொழில்நுட்பங்கள்
மிகச்சிறிய கிராமப் பகுதியான சூலக்கரையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். ஆனாலும், தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்கள். அதனால் பலர் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தனர்.
இந்நிலையில், எங்கள் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறையிலான வகுப்புகளை தொடங்கினோம். கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்தோம். மாணவர்களுக்கு கணினிகளை கையாள கற்றுக் கொடுத்தோம். ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கி னோம்.
காலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துகிறோம். மாணவர்கள் தினந்தோறும் நாளிதழ்கள் வாசிக்கின்றனர். நாளிதழ்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் மாணவர்களிடையே பொது அறிவு போட்டி நடத்தப்படுகிறது. மாதத்துக்கு ஒருமுறை மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட தனித்திறன்களை வளர்க்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் வார்த்தைகளை கட்டமைக்கும் பயிற்சி தருகிறோம்.
அழிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் போன்ற கிராமப்புறக் கலைகளை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். செஸ் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நட்டுள்ளோம். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர். மாணவர்களின் பிறந்த நாளின்போது மரக்கன்றுகளை பரிசாக வழங்கி வாழ்த்துகிறோம்.
தினமும் யோகா பயற்சி
மாணவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதற்கான பயிற்சிகள் மட்டுமின்றி, உடல் நலன், மன நலனை பாதுகாப்பதற்கான பயிற்சிகளும் எங்கள் பள்ளியில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக தினமும் அரை மணி நேரம் எளிய யோகாசனப் பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
மேலும், மழைக் காலங்களில் பாதுகாப்பில்லாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்த்தல், வெளியில் செல்லும்முன் அதுகுறித்து கண்டிப்பாக பெற்றோருக்கு தெரிவித்துச் செல்ல வேண்டியதன் அவசியம், அவசர காலங்களிலும், ஆபத்துகளில் சிக்கியவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளுதல், சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் போன்றவை பற்றி மாணவர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.
அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கை
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக எங்கள் பள்ளி மாணவர்களிடம் இயல்பாகவே கற்றல் திறன் அதிகரிக்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது. மாணவர்களிடம் ஏற்படும் இந்த வளர்ச்சிப் போக்கை பெற்றோர்களும், ஊர் மக்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இதன் பலனாக தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை ஏராளமானோர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். சூலக்கரை மட்டுமின்றி அருகில் உள்ள மருளூத்து, கூரைக்குண்டு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கூட இப்போது ஏராளமான மாணவர்கள் இந்த அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். வரும் ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார் தலைமை ஆசிரியர் சத்தியபாமா.
அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடுமையான உழைப்பு, ஊர் மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் தமிழகத்தின் முன்மாதிரி அரசுப் பள்ளிகளில் ஒன்றாக சூலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் வளர்ந்து வருகிறது.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 86672 21876
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago