தமிழகம் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய விவகாரம்: உ.பி. பாஜக நிர்வாகிக்கு மார்ச் 20 வரை முன்ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹார் தொழிலாளர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டதாக பொய்ச் செய்தி பரப்பிய உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு, தற்காலிக முன்ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இது வதந்தி என்றும் போலி வீடியோக்கள் என்று அறிவித்த தமிழக காவல் துறை இதை பரப்பியவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், உத்திரப் பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளரான பிரஷாந்த் உம்ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து "தமிழகத்தில் இந்தி பேசியதற்காக 12 பிஹார் தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர் என்றும், பிஹார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், தேஜஸ்வி யாதவ் தமிழக முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து பிரஷாந்த் உம்ராவ் மீது, தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 கலவரத்தை தூண்டுதல், 153(A),மதம், இனம், மொழி, வசிப்பிடங்களில், இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் , 504 வேண்டுமென்றே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தூண்டிவிடுதல் மற்றும் 505(1)(b), 505(1)(c), 505(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய, தமிழக காவல்துறையின் சிறப்புக் குழு உத்தரப் பிரதேச மாநிலம் விரைந்தது.

இந்நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் தனக்கு எதிராக தமிழக காவல் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் தன்னைக் கைது செய்ய தடை விதிக்க கோரியும், இடைக்கால முன் ஜாமீன் (Transit Anticipatory Bail) வழங்க கோரியும் பிரஷாந்த் உம்ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

அந்த மனுவில், "நான் சில முன்னணி பத்திரிகையாளர்களின் ட்வீட்களையே பகிர்ந்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, நான் உரிய நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் கோருவதற்கு ஏதுவாக, என்னை கைது செய்யாமல் இருக்க தற்காலிக முன்ஜாமின் வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "இந்த வழக்கில் 12 வாரம் இடைக்கால முன்ஜாமீன் எப்படி கொடுக்க முடியும்?” கேள்வி எழுப்னார். பின்னர், “தூத்துக்குடி அல்லது மதுரை சென்று உரிய நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஒரு வாரம் மட்டுமே தற்காலிக ஜாமீன் வழங்க முடியும். காரணம், தமிழக நீதிமன்றத்தை அணுகுவதை சிரமம் கிடையாது" என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில், "மனுதாரர் மீது தூத்துக்குடி மற்றும் திருப்பூரில் வழக்கு பதிவு செய்யயப்பட்டுள்ளது. தமிழக அரசு வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளது. எனவே, ஒரு வார கால அவகாசம் போதாது. குறைந்தபட்சம் 4 வார கால அவகாசம் வேண்டும்" என கோரப்பட்டது.

இதனை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, "பேச்சுரிமை என்ற பெயரில் மனுதாரர் விஷமத்தனமாக கருத்துக்களை பதிவிடக்கூடாது. மனுதாரர் தான் பதிவிட்ட கருத்துக்காக, வருத்தமோ, மன்னிப்போ கூட தெரிவிக்கவில்லை. ஒரு விஷமத்தனமான கருத்தால் எந்தளவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். எனவே மனுதாரருக்கு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது" என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தில் மனுதாரர் மன்னிப்பு கோரியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். அப்போது உம்ராவ் தரப்பில், "அது அவரின் சொந்தக் கருத்து கிடையாது. ஒரு பத்திரிகையின் செய்தியை பகிர்ந்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொய்யான தகவலை பரப்பிய விவகாரத்தில் உரிய நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோருவதற்கு ஏதுவாக 10 நாட்கள் உம்ராவுக்கு தற்காலிக முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அப்போது, 10 நாட்கள் போதாது எனவும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என உம்ராவ் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு வரும் 20-ம் தேதி வரை தற்காலிக முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்