ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு - மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற திருவிழா

By க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கிராமத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சுவாமிகள் மேலதாளங்கள் முழங்க கிள்ளை கடற்கரை பகுதிக்கு வருவார்கள். அங்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று (மார்ச்.7) கிள்ளையில் மாசி மக விழா நடைபெற்றது. கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சுவாமிகள் கிள்ளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி இன்று கடற்கரைக்கு வந்தபோது, கிள்ளை தைக்கால் பகுதியில் உள்ள தர்க்கா டிரஸ்ட் நிர்வாகி சையது சக்ஹாப் தலைமையில் ஏராளமான முஸ்லிம் பிரமுகர்கள் வரவேற்பளித்து பூவராக சுவாமிக்கு படையலிட்டனர்.

தர்காவில் படையலிடப்பட்ட பொருள்கள் ஸ்ரீமுஷ்ணம் சாமி கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டன. கிள்ளை பேரூராட்சி தலைவர் அமுதா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து குறிப்பிட்ட கிள்ளை தர்கா டிரஸ்ட் நிர்வாகி சையது சக்காப், ''பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு அளிப்பது புதிதல்ல. இந்த நிகழ்வை எங்களது முன்னோர்கள் கடந்த 1892ம் ஆண்டு தொடங்கிவைத்தார்கள். அதனை நாங்களும் கடைப்பிடித்து வருகிறோம். பூவராக சுவாமி வரும்போது மேல தாளங்களுடன் வரவேற்று அவர்கள் எடுத்து வரும் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு அதனை தர்காவில் வைத்து பார்த்தியா ஓதி நாட்டில் அனைவரும் சுபிட்சமாக இருக்கும் வகையில் பிரார்த்தனை மேற்கொண்டு அதனை மீண்டும் சுவாமிக்கு வழங்குவோம். பின்னர் சுவாமி கடற்கரைக்கு புறப்பட்டுச் செல்வார்'' என தெரிவித்தார்.

கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், ''இது பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான செயல்பாடு. இதனை கிளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரவேற்று வழி அனுப்பி வைப்பதில் பெருமை கொள்கிறோம்'' என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE