பட்டியல் வகுப்பு சாதிச்சான்று கேட்டு 8-வது நாளாக போராட்டம் - குறவர் இன மக்களுடன் திருப்பத்தூர் ஆட்சியர் பேச்சுவார்த்தை

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு எஸ்சி குறவர் சாதிச்சான்று வழங்க வேண்டும் எனக்கேட்டு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

8-வது நாளாக இன்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தினம் ஒரு நூதனப் போராட்டம் நடத்தி வரும் குறவர் இன மக்கள் தங்களின் 50 சதவீதம் பேருக்கு எஸ்சி சாதிச்சான்று வருவாய் துறையினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ள 50 சதவீதம் பேருக்கு எஸ்சி குறவர் சாதிச்சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே குழந்தைகள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்தபடியே அங்கேயே சமைத்து சாப்பிட்டு சாதிச்சான்று கேட்டு போராட்டம் நடத்தி வருவதை அறிந்த சில அரசியல் கட்சி பிரமுகர்கள் குறவர் இன மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், 8வது நாளாக இன்று (6-ம் தேதி) போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் போராட்டத்தை தொடர்வதாக குறவர் இன மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களை கைது செய்யும் விதமாக காவல் துறைக்கு சொந்தமான 3 வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டது.

இதைகண்ட குறவர் இன மக்கள் என்ன ஆனாலும் சரி சாதிச்சான்று பெறாமல் இங்கிருந்து கலைந்து போக மாட்டோம். காவல் துறையினர் வேண்டுமென்றால் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைக்கட்டும். அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சாதிச்சான்றிதழை வருவாய் துறையினர் வழங்கவேண்டும். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி முழக்கமிட்டனர்.

இது குறித்து வந்த தகவலின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று மாலை திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, குறவர் இன மக்கள் ஆட்சியரிடம் கூறியதாவது, ‘‘பட்டியல் வகுப்பு சான்றிதழ் கேட்டு குறவர் இனத்தவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும்போது வருவாய் துறையினர் எங்களை சமாதானம் செய்யும் விதமாக 10 முதல் 20 பேருக்கு பட்டியல் இன சாதிச்சான்று வழங்கிவிட்டு மீதியுள்ளவர்களுக்கு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவதாக கூறி தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகின்றனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால், கடந்த மாதம் 27-ம் தேதிமுதல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

குழந்தைகளுடன், பகல், இரவு பாராமல் ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் உணர்வுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அரசு வேலை, உயர் கல்வி, ராணுவப்பணி, அரசின் நல திட்டம் கிடைக்க பெறாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.

எங்களின் போராட்டத்தை வருவாய் துறையினர் அலட்சியப்படுத்துகின்றனர். குறிப்பாக நாட்றாம்பள்ளி வட்டத்தில் எங்களை மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே எத்தனை நாட்களாக ஆனாலும், எங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம். பட்டியல் வகுப்பு சான்றிதழ் பெறாமல் நாங்கள் வீடு திரும்பமாட்டோம்’’ என திட்டவட்டமாக கூறினர்.

இதற்கு, பதில் அளித்த பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ‘‘குறவர் சாதிச்சான்று கேட்டு போராட்டம் நடத்துவர்களின் பிரச்சினை ஒரு நாளில் தீர்க்க முடியாது. இதில், நிறைய ஆராய வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு வருவாய் கிராமத்தில் வருவாய் துறையினர் மூலம் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் எஸ்சி சாதிச்சான்று வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாவட்டங்களில் குறவர் இனத்துக்கு எஸ்சி சாதிச்சான்று வழங்குவதாக இங்கு கூறுகிறீர்கள். அதை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். நியாயமான மக்களுக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும். விசாரணை அதிகாரிகளுக்கு குறவர் இன மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும். வருவாய் துறையினர் மூலம் உங்கள் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஆனால், இதை ஏற்காத குறவர் இன மக்களிடம் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தியபோது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்