தமிழக சிறைகளில் புதிதாக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் - சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தகவல்

By வ.செந்தில்குமார்

வேலூர்: தமிழக சிறைகளில் புதிதாக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

வேலூர் ஆப்காவில் தென்னிந்திய சிறை அதிகாரிகளுக்கான ‘செங்குத்தான சிறப்பு கலந்துரையாடல்’ என்ற 5 நாள் பயிற்சி முகாம் இன்று (6-ஆம் தேதி)தொடங்கியது. ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பேசும்போது, ‘‘இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிகாரிகள் தங்கள் பதவிகளை மறந்து கலந்துரையாட வேண்டும். சிறைவாசிகளுக்கான சீர்திருத்தம், மறுவாழ்வு, சமுதாயத்தில் அவர்கள் மீண்டும் இணைவது முக்கியம். இவை நார்வே, ஸ்வீடன் நாடுகளில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

சிறைச்சாலை என்பது தண்டனை அளிக்கும் இடமாக இருக்காமல் மறுவாழ்வு மையமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கான சிறை விதிகள் 1924-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1980-ஆம் ஆண்டு நீதியரசர் முல்லா கமிட்டி பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டு மாதிரி சிறைத்துறை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சிறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு 100 சதவீதம் தொழிற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அதை கற்கவும் மாற்றத்தை விரும்பவும் தயாராக இருக்கிறார்கள். சூழ்நிலை காரணமாகவே அவர்கள் குற்றவாளியாகிறார்கள். அவர்களிடம் இருக்கும் திறமைகளை பார்க்க வேண்டும். சிறைவாசிகள் புத்தகங்களை அதிகம் படிக்க வைக்க வேண்டும். இதற்காக புத்தக திருவிழாக்களில் புத்தகங்களை தானமாக பெற்று வருகிறோம். இதுவரை ஒரு லட்சம் புத்தகங்களை பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து பெற்றுள்ளோம்.

அதேபோல், சிறைச்சாலையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு பயிற்சியும் சிறைச்சாலை அளவில் இசைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. விரைவில் சிறைச்சாலைகள் இடையிலான விளையாட்டு, இசைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சிறைத்துறை சார்பில் புதிதாக 12 பெட்ரோல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதில், கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.

சமீபத்தில் சிறைச்சாலைகளில் தொழிற்சாலை சலவை இயந்திரங்கள் அமைக்கப்பட்டதை காந்தியின் பேரன் பாராட்டி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் நர்சரி, பூங்கா அமைக்கவும், மூலிகை செடிகள் பராமரிப்பதன் மூலம் அவர்களின் மனநிலை மாறும். அவர்கள் மீண்டும் குற்ற வாழ்க்கைக்கு செல்ல மாட்டார்கள்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டிஜிபி அமரேஷ் புஜாரி கூறும்போது, ‘‘சிறைவாசிகளின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறைகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் டைல்ஸ் தளத்துடன் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிறைகளிலும் ஒவ்வொரு கம்ப்யூட்டர் மையங்கள் தொடங்கப்படும். இங்கு 3, 6 மாதங்கள் பயிற்சி பெறுபவர்கள் வெளியில் சென்றால் தனியாக கம்ப்யூட்டர் மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றும் நன்னடத்தை சிறைவாசிகளுக்கு கூலி உயர்வு அளிக்கப்பட உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE