கடந்த 11 ஆண்டாக காசநோய் வில்லை விற்பனையில் மாநில அளவில் முதலிடம்: சேலம் ஆட்சியர் பெருமிதம்

By வி.சீனிவாசன்

சேலம்: ‘காசநோய் வில்லைகள் விற்பனையில் கடந்த 11 ஆண்டாக சேலம் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது' என 73-வது தொகுதி காசநோய் வில்லைகள் வெளியீட்டு விழாவில் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

73-வது தொகுதி காசநோய் வில்லைகளை ஆட்சியர் கார்மேகம் வெளியீட்டு விழாவில் பேசியது: "காசநோய் வில்லைகள் விற்பனையில் கடந்த 11 ஆண்டாக சேலம் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.14.03 லட்சம் மதிப்புள்ள காசநோய் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டு முழு இலக்கு எய்தப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கு ரூ.15.03 லட்சம் மதிப்புள்ள காசநோய் வில்லைகள் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட காசநோய் வில்லைகளின் மதிப்பை விட ரூ.ஒரு லட்சம் கூடுதலாக தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்கான 72-வது தொகுதி காசநோய் வில்லைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் விற்பனை செய்த மாநகர காவல்துறை ஆணையாளர், சேலம் எஸ்பி-க்கு முதல் பரிசும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ‘டீன்’, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சேலம் (கிழக்கு), சேலம் (தெற்கு), ஆத்தூர், சங்ககிரி ஆகியோருக்கு இரண்டாம் பரிசும், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆத்தூர், சேலம், மாவட்ட கல்வி அலுவலர் (ஊரகம்) சேலம், நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் ஆகியோருக்கு மூன்றாம் பரிசும் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2022-ஆம் ஆண்டு 73,283 காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்து 4,292 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆண்டு கண்டறியப்பட்ட காசநோயாளிகளில் 87% சதவீதம் நபர்கள் முழுவதும் குணமடைந்துள்ளனர். நுரையீரல் பாதிப்பு காசநோய் தொற்றுள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் காற்றின் மூலமாக அருகில் உள்ள நபருக்கு காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, காசநோயாளிகள் இரும்பும் போதும் தும்பும் போதும் கைகுட்டை பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முறையாக காசநோய்கான கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக புரத சத்துள்ள ஆரோக்கியமான உணவு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் காசநோயிலிருந்து முழுமையாக குணமடையலாம்" இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாவட்ட காசநோய் தடுப்புக் கழகத்தின் சார்பில் 73-வது தொகுதி காசநோய் வில்லைகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட, சேலம் எஸ்பி சிவக்குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE