‘அமைதியான ரயில் நிலையம்’ முறை வாபஸ்: சென்னை சென்ட்ரலில் மீண்டும் ஒலிப்பெருக்கி அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ‘அமைதியான நிலையம்’ ஆக இருக்கும் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாட்டின் முக்கியமான, பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இது தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து தினமும் 80-க்கும் மேற்பட்ட விரைவு, மெயில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 1.5 லட்சம் பயணிகள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையத்தை அமைதியான ரயில் நிலையமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, கடந்த வாரம் முதல் இந்த ரயில் நிலையத்தில் ஆடியோ அறிவிப்புகள் இருக்காது என்றும், ரயில் தொடர்பான தகவல்களை காட்சிப்படுத்தல் மூலமாக (பெரிய மற்றும் சிறிய திரைகள்) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு அறிவிப்புகள் மிக சப்தமாக ஒலிபரப்பப்படுகின்ற காரணத்தால், பயணிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு தீர்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே முதலில் தெரிவித்தது.

ஆனால், மாற்றுத்திறனாளிகள் தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி அறிவு கிடைக்கப் பெறாத மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான நிலையமாக வைத்திருக்க செயல்படுத்தப்பட்ட நடைமுறைகள் திரும்ப பெறப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE