தமிழகம்

“ஈரோடு கிழக்கு போல் பொதுத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற முடியாது” - ராஜேந்திர பாலாஜி பேச்சு

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றது போல், பொதுத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற முடியாது" என்று சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:“தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமி என 30 ஆண்டு ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. அதிமுகவில் பிளவு ஏற்படும்போதெல்லாம் குறுக்கு வழியில் திமுக ஆட்சியைப் பிடித்து விடுகிறது. சேவல், புறா என்று பிரிந்த நேரத்திலும் திமுக ஆட்சிக்கு வந்தது.

வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று 2 ஆண்டுகள் ஆகியும் சொன்னதை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் மிக்ஸி, பேன், கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப், கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இன்று அதிமுக ஆட்சியில் வழங்கிய அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்தி விட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடு, மாடு தவிர அனைத்தையும் கொடுத்து வெற்றி பெற்று விட்டனர். இடைத்தேர்தல் போல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், எம்எல்ஏ மான்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT