''மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம்'' - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழகத்தில் தொன்மை வாய்ந்த நாகரிகத்தின் ஒரு முக்கியமான பகுதியாக விளங்கக்கூடிய இந்த தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சிப் பணி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உங்களுடைய கருத்துக்களைக் கேட்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்து, அதற்கென, பல திட்டங்களை வகுத்து வருகிறது. அதே சமயத்தில், அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக, கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காட்டப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடைய திட்டங்களாக இது அமைந்திருக்கிறது.

வேலை உறுதி திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படக்கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட தொகையினை விரைந்து முழுமையாக செலவு செய்து முடியுங்கள். இன்றைய ஆய்வின்படி கடந்த ஆண்டிற்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகள் அதிகளவில் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டு பணிகளைத் துரிதப்படுத்துங்கள்.

மாவட்ட ஆட்சியர்களாகப் பணிபுரியும் நீங்கள் அரசின் முன்னுரிமை இனங்கள் என்னென்ன என்பதை தெளிவாக உணர்ந்து, உங்களுடைய பணிகளில் அவற்றிற்கு முன்னுரிமை அளித்து, அத்திட்டங்களைத் துரிதப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அரசு நிர்வாகம் என்பது யாரால் உரத்த குரல் கொடுக்க முடியாதோ அவர்களின் தேவையை உணர்ந்து அவற்றை நிறைவேற்றித் தருவதே ஆகும். அந்த வகையில் பார்க்கும் பொழுது சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், அரசு மருத்துவமனையை நாடும் ஏழை எளிய மக்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர், திருநங்கையர் ஆகியவர்களின் தேவைகளை, குறைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தரவேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.

இந்த அரசின் முக்கியமான புதிய திட்டங்களை நீங்கள் பட்டியலிட்டுப் பார்த்தால் அவற்றில் ஓங்கி ஒலிப்பது, சமூக நீதியின் குரல், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழ் மொழி மற்றும் அதன் வரலாற்றுத் தொன்மைகளைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் என குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்போது, நான் சொன்ன இனங்களுக்கான குறிப்பான திட்டங்கள் எவையெவை என்பதை நீங்களே அறிவீர்கள். அத்தகைய பணிகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திட்டங்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பான தேவையிருக்கும். உதாரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பழவகைகள் மற்றும் காய்கறி விவசாயம் அவை தொடர்பான தேவைகள் மற்றும் மலை மாவட்டம் என்பதால் அது உருவாக்கும் சில சிறப்புத் தேவைகள். சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தவரை அவ்வப்போது காணப்படும் வறட்சி நிலை, பெரும் தொழில் அமைப்புகள் இல்லாததால் அங்கு புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவை.

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறப்பகுதிகளில் காணப்படும் சில குறிப்பிட்ட வளர்ச்சி தொடர்பான தேவைகள் என குறிப்பிட்டுக் கூறலாம். மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய நீங்கள் இவற்றை உணர்ந்து மாநிலம் முழுவதற்குமான அரசின் பொதுவான திட்டங்களை செயல்படுத்துவதோடு உங்கள் மாவட்டத்திற்கே உரிய தனிப்பட்ட சூழ்நிலைக்கான திட்டங்களையும் அரசுக்கு எடுத்துக்கூறி அவற்றை செயல்படுத்த தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு எத்தகைய பெரிய திட்டங்களை வகுத்தாலும், அதனை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களாகிய உங்களுக்கும்தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் திட்டங்களை கள ஆய்வு செய்வதன் மூலம் துரிதப்படுத்துவதோடு, அதன் தரத்தினையும் உறுதி செய்யலாம். ஆகவே, கள ஆய்வுப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதோடு, சார்நிலை அலுவலர்கள் பணியையும் ஆய்வு மேற்கொள்ளுங்கள். உங்களுடைய உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு முக்கியமான இனம், பட்டா மாறுதல், பட்டாக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், மற்றும் சான்றிதழ்களை குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்குதல் ஆகியவையாகும். ஒரு விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலகத்தில் மனு சமர்ப்பித்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஏற்கெனவே சட்டத்தில் வகுத்தபடி உள்ள கால அளவிற்குள், அந்தச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் அல்லது ஏன் வழங்க இயலாது என்பதற்கான தகவல் அவருக்கு சென்றடைய வேண்டும்.

இந்த நடைமுறை ஒவ்வொரு அலுவலகத்திலும் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். இதனை அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும். இதற்கான வழிமுறைகள் முறையாக வகுக்கப்பட வேண்டும். இதனை நான் அடுத்த ஆய்வுக் கூட்டத்தின் போது கட்டாயம் சரிபார்ப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் பணி என்பது முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டிய ஒன்றாகும். பெரும் நம்பிக்கையோடு மக்கள் உங்களை நாடி வந்து மனுக்களை சமர்ப்பிக்கின்றார்கள்; தங்கள் கோரிக்கைகளை பெரும் எதிர்பார்ப்போடு அளிக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை நீங்கள் தான் அரசு. எனவே, உங்களால் இயன்றவரை அந்தப் பிரச்சனையை, தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். நான் முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப் போல, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அரசு துறைகளின் செயல்பாட்டை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்தோம். குறிப்பாக, கல்வித் துறையில் மாணவர்களின் செயல்பாடு, நகராட்சி நிர்வாகப் பணிகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு பணிகளின் செயலாக்கம் மற்றும் சாலை வசதி போன்ற பல்வேறு தேவைகளை துரிதப்படுத்தி முடிப்பது குறித்து இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய ஆய்வின் போது, நீங்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறீர்கள்; திட்டச் செயலாக்கத்தை உங்கள் மாவட்டத்தில் மேம்படுத்துவது குறித்த உங்கள் உறுதிமொழிகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்பதை கூறிக்கொண்டு, இங்கு வருகைபுரிந்து பல்வேறு கருத்துக்களை உங்களுடைய நிலைபாடுகளை, ஆங்காங்கு இருக்கின்ற பிரச்சனைகளை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். எனவே, அனைத்து நிலை அரசு அலுவலர்களுக்கும் என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்