சென்னை: இ - சிகரெட்டுகளின் சட்டவிரோத விற்பனையைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகையிலை சிகரெட்டுகளை விட மிகக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகின்றன. இ-சிகரெட்டுகளின் தீமைகள் பற்றி அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருவது பெரும் கவலையைத் தருகிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கான கருவி என்ற பெயரில் தான் இ-சிகரெட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆயின. புகைப்பழக்கத்தை கைவிட முடியாதவர்கள், அதற்கு மாற்றாக இ-சிகரெட்டுகளை பிடிக்கலாம்; அதனால் உடல்நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அவ்வாறு செய்தால் காலப்போக்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விடலாம் என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், புகைப்பழக்கத்திற்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட இ-சிகரெட்டுகளே இப்போது இளைஞர்களை சீரழிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன.
இ-சிகரெட்டுகளை பற்றவைக்கத் தேவையில்லை. சிகரெட் போன்ற வடிவத்தில் இருக்கும் அவற்றை வாயில் வைத்து இழுத்தாலே அதில் உள்ள வேதிப்பொருட்கள் பேட்டரி மூலம் ஆவியாக்கப்பட்டு புகை வெளியாகும். இ-சிகரெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் மனிதர்களை மயக்கக்கூடிய பல வகையான சுவையும், மணமும் கொண்டவை. அதனால் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையான இளைஞர்கள் - மாணவர்களால் அவற்றிலிருந்து மீண்டு வர முடியாது. தமிழகத்தில் இ-சிகரெட்டுகள் பல்வேறு பெயர்களில் சட்டவிரோத சந்தைகளில் கிடைக்கின்றன. 100 முறை இழுக்கக்கூடியவற்றில் தொடங்கி 5000 முறை இழுக்கக்கூடியவை வரை என பல அளவுகளில் இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன.
புகையிலையை மூலப்பொருளாகக் கொண்ட சிகரெட்களுடன் ஒப்பிடும் போது, சில இ-சிகரெட்டுகளில் நிகோட்டின் அளவு குறைவு என்பதைத் தவிர, இ-சிகரெட்டுகளில் எந்த நன்மையும் இல்லை. ஆனால், தீமைகள் ஏராளமாக உள்ளன. இ-சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், இழுக்கும் அளவு ஆகியவற்றைப் பொருத்து அதன் நிகோட்டின் அளவு மாறுபடும். பல இ - சிகரெட்டுகளில் புகையிலை சிகரெட்டுகளை விட அதிக நிகோட்டின் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இ - சிகரெட்டுகளில் பிரோப்பிலின் கிளைகோல் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவை மனிதர்களுக்கு பல வகையான புற்றுநோய்களையும், இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், பலர் இதன் தீமைகளை உணர்ந்தும், சிலர் உணராமலும் இ-சிகரெட்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையையே சீரழித்து விடும்.
இ-சிகரெட்டுகளின் தீமைகளை உணர்ந்த மத்திய அரசு அதை பயன்படுத்த வேண்டாம் என்று 2018-ம் ஆண்டில் அறிவித்தது. 2019-ஆம் ஆண்டில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. ஆனால், அதற்கு பல மாதங்கள் முன்பாகவே தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இ-சிகரெட்டுகள் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானது.
தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, தமிழகத்தில் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும். அதன் மூலம் தமிழக இளைஞர்களை மிகவும் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago