திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பிஹார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகின. பல்வேறு வதந்திகளும் பரவின. இதன் காரணமாக, இங்குபணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில், பெரும்பாலான தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பியதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, திருப்பூரில் பிஹார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதால், இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பின. இதையடுத்து, இதுபற்றி ஆய்வு செய்ய தமிழகத்துக்கு அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி, பிஹார் மாநிலத்தின் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை செயலர் பாலமுருகன் தலைமையில், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் துறை ஆணையர் அலோக்குமார், சிறப்பு படை எஸ்.பி. சந்தோஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்றுதிருப்பூர் வந்தனர். மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சஷாங் சாய் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேசினர்.
» சர்வைவா | அமேசான் காட்டுக்குள் காணாமல் போனவர் 31 நாட்களுக்கு பிறகு மீண்டு வந்த அதிசயம்
» மான்செஸ்டர் யுனைடெட் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய லிவர்பூல்
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தினர், தொழில் துறையினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினர். தொடர்ந்து, வடமாநிலத்தினர் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பிஹார் குழுவினர் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பிஹார்மாநில குழு தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
ஜோத்பூர் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் நடந்ததை திருப்பூரில் நடந்த சம்பவமாக திரித்து, பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதே இந்த குழப்பம், பதற்றத்துக்கு காரணம். இவை பொய் செய்திகள், போலி வீடியோ என தெரியவந்துள்ளது.
மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு மாவட்டநிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கைகளால் திருப்பூர் இயல்பான நிலையில் உள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முழு திருப்தியை ஏற்படுத்தி உள்ளன. துரிதமாக செயல்பட்டு 4 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு தேவையான உதவி மையங்களை தொடங்கி, அவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது வரை அனைத்தும் திருப்திகரமாக உள்ளது. அதற்காக நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் கூறும்போது, “இணையதளம் மூலமாக பரவிய வதந்திகள் அடிப்படையில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர், ஏடிஎஸ்பி தலைமையில் குழு அமைத்து, வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் கூறும்போது, “சட்ட நிபுணர்களுடன் பேசி, சமூக வலைதளங்களில் போலி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் தடுக்கவும், வீடியோக்களை அழிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்கவும் திட்டமிட்டுள்ளோம். தனிப்படையினர் பிஹார் செல்லவும் தயாராக உள்ளனர். கட்டுப்பாட்டு மையத்துக்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. பெரும்பாலும் பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைப்பவர்களிடம், ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தன்னார்வலர்கள் மூலம் விளக்கம் அளித்து வருகிறோம்” என்றார்.
கோவையில் இன்று ஆய்வு
மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறும்போது, “இந்த வீடியோக்கள் அனைத்தும் திருப்பூரில் எங்கும் பகிரப்படவில்லை. இந்த போலி வீடியோ தொடர்பாக வட மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.
பிஹார் குழுவினர் பெருமாநல்லூரில் உள்ள பனியன் நிறுவனத்திலும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டனர். தாங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பிஹார் குழுவினர், கோவையில் கள நிலவரத்தை தெரிந்துகொள்வதற்காக இன்று நேரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தொழில்நிறுவன பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago