சென்னை: வடமாநில தொழிலாளர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள் என்றும், தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டுமென்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள்மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட பயங்கரவாத சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்த அரசில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். அத்துடன், தமிழக முதல்வருக்கு இந்திய அளவில் அவப்பெயரை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.
ஒருபுறம் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது, இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
» விவசாய மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்றப்படும்: முதல்வர் ஸ்டாலின்
» பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார்
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (1) (d)அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் தடையின்றிச் செல்வதற்கு உரிமை வழங்கியுள்ளது. 19(1) (e)இந்திய குடிமக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று குடியிருப்பதற்கு உரிமை வழங்குகிறது. இவை இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநிலத்துக்கு உள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தான் அதிகம். மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கிறவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4% மட்டுமே. உலக நாடுகளை ஒப்பிடும்போது மாநிலம்விட்டு மாநிலம் புலம்பெயர்வோர் இந்தியாவில் மிகவும் குறைவு என உலக வங்கி, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1979 ஆம் ஆண்டு ’மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர் சட்டம்’ இயற்றப்பட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும். அவர்களை அழைத்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நியாயமான கூலி மற்றும் சுகாதார வசதிகளையும், அந்தத் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி வசதியையும் அந்த ஒப்பந்ததாரர் செய்து தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரமும் வரம்பற்றதாக உள்ளது. கால்நடைகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோல சுகாதாரமற்ற சூழலில் வைத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சட்டப்படி அவர்களுக்குள்ள பிற உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago