வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: கும்பகோணம் டிஎஸ்பி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி. மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.மகேஷ்குமார் தலைமை வகித்துப் பேசினார். அப்போது, ”கும்பகோணத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கான வட மாநில குடும்பங்கள் கும்பகோணத்தில் வசித்து வருகின்றன.

கடந்தாண்டிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து கும்பகோணம் வந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் இருப்பிடம் தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும், அவர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் வழக்கம்போல் பணியாற்றலாம். வெளி மாநிலங்களில் இருந்து பணிபுரிய வரும் தொழிலாளர்கள் தங்களது இருப்பிடம் தொடர்பான ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். கும்பகோணம் கோட்ட அளவிலான போலீஸார் பொதுமக்களுக்கு விதித்துள்ள பொது விதிமுறைகளை வெளி மாநில தொழிலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். கோட்ட அளவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதில் காவல் ஆய்வாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE