புதுச்சேரியில் எல்லா துறைகளிலும் ஊழல் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுவையில் கலால், பொதுப்பணி, உள்ளாட்சி, காவல் என எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், ஊழல் ஆட்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையேற்று செயல்பட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கையோடு கை சேர்க்கும் மக்களை சந்திக்கும் பிரச்சார நடைபயணம் லாஸ்பேட்டை மகாவீர் நகரில் இன்று தொடங்கி நடைபெற்றது.

இதற்கு வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நடைபயணத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசியதாவது, “நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 40 சதவிதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 10 சதவீதமாக இருந்தது. தற்போது 40 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்ந்துவிட்டன.

மோடி ஆட்சியில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் விநியோக திட்டம், வீடுகளுக்கு பைப் மூலம் சமையல் எரிவாயு கொடுக்கும் திட்டம், சூரிய மின் உற்பத்தி திட்டம் என 100-க்கும் மேற்பட்ட திட்டங்கள் அதானியில் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆசிய அளவில் முதல் பணக்காரராகவும், உலக அளவில் 3வது பணக்காரராகவும் இருந்தார். அதானி தன்னுடைய பங்குகளின் விலையை உயர்த்தி மக்களை ஏமாற்றி இருக்கிறார் என்று அறிவித்த பிறகு ரூ.12 லட்சம் கோடியை அவர் இழந்துள்ளார். புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு அனைத்து திட்டங்களையும் கொடுப்போம்; கடனை தள்ளுபடி செய்வோம்; மாநில அந்தஸ்தை கொடுப்போம்; சுற்றுலாவை வளர்ப்போம்; கல்வியை தரம் உயர்த்துவோம்; வியாபாரத்தை பெருக்குவோம் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை.

மாறாக கலால், பொதுப்பணி, உள்ளாட்சி, காவல் என எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழல் ஆட்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலையேற்று செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியில் வளர்ச்சி இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன. கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால் மதுபானக்கடையில் தான் விழ வேண்டும். மாநிலம் முழுவதும் மதுக்கடையை திறந்து புதுச்சேரி கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்துவிட்டார். எனவே தான் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்தியில் உள்ள மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசார நடைபயணத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாவீர் நகரில் தொடங்கிய பிரசார நடைபயணம் தொகுதி முழுவதும் சென்று ஜீவானந்தபுரத்தில் நிறைவடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE