மதுரை: மதுரையில் இன்று(மார்ச் 5) நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றித் தரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து 1.2.2023 மற்றும் 2.2.2023 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக 15.2.2023 மற்றும் 16.2.2023 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (5.3.2023) காலை மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம், ராம்நாடு-சிவகங்கை வைகை பாசன விவசாயிகள் சங்கம், வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, பாரம்பரிய மீனவர் சங்கம், துறைமுக விசைப்படகு சங்கம், வர்த்தக சங்கங்கள், அய்யம்பாளையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகள் சங்கம், பெரியகோட்டை வட்டார விவசாயிகள் சங்கம், சிறுதொழில் நிறுவனங்களின் சங்கங்கள், கோகோ கிரீன் சப்ஸ்ட்ராக்ட்ஸ், முல்லைபெரியாறு – வைகை ஆறு நீரினை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் சங்கம், தேனி மாவட்ட கோராப்பட்டு உற்பத்தியாளர்கள் சங்கம், தேனி மாவட்ட சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடைய பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும், தென் தமிழகம் தொழில் வணிகத்தில் ஏற்றம் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண சிறப்புக் கவனம் செலுத்தி வருவதற்காகவும் தங்களது பாராட்டுதல்களையும் நன்றியினையும் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், மதுரையில் புதிய சக்கிமங்கலம் சிட்கோ தொழில் பூங்கா அமைத்திடவும், மதுரை விமான நிலையத்திற்கான ஓடதள விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்திடவும், மதுரையில் மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்திடவும், மதுரையில் பஸ்போர்ட் அலுவலகம் அமைத்திடவும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டனர்.
திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை பகுதியை மேம்படுத்தி சுற்றுலா மையமாக மாற்றிட வேண்டும் என்றும், பழனி – கொடைக்கானல் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், பின்தங்கிய பகுதிகளான எரியோடு, குஜிலியம்பாறை பகுதிகளில் தொழிற்பேட்டை அமைத்து, ஒன்றிய அரசின் ரயில்வே மற்றும் ராணுவத் துறைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் இரும்புபெட்டி தொழில்களை சந்தைப்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என்றும், திண்டுக்கல் மாநகரில் பெரிய அளவில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் சார்பில் மதுரையில் உருவாக்கப்படும் மாஸ்டர் பிளான் திட்டத்தில் சிறு, குறுந்தொழில்களுக்கு 15 சதவிகித நிலத்தை தொழிற்சாலை நிலமாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகித மானியத்தை குறைத்திட வேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
விவசாய சங்கங்களின் சார்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தோட்டக்கலை கல்லூரி அமைத்திடவும், காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்திடவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 1500 யூனியன் கண்மாய்களை தூர்வாரி பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்திடவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை அமைத்திடவும், திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த மதிப்புக்கூட்டு மையம் அமைத்திட வேண்டும் என்றும், திராட்சை விவசாயிகள் பந்தல் அமைத்திட மானியம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் உரங்கள் வழங்கிட வேண்டும் எனவும், முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரையில் தூண்டில் வலையுடன் கூடிய துறைமுகம் அமைத்திடவும், பாம்பன் பகுதியில் உள்ள குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தை ஆண்டு முழுவதும் பயன்படுத்திட அலை தடுப்பு சுவர் அமைத்திடவும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் அளவினை உயர்த்தி வழங்கிடவும், ராமேஸ்வரத்தில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைக்க புதிய மீன்பிடி துறைமுகம் (Jetty) அமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பட்டு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் இலவம்பஞ்சிற்கான ஜிஎஸ்டி வரியை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், தேனி மாவட்டத்தில் மாங்காய் கூழ் செய்யும் தொழிற்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். அனீஷ் சேகர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. விசாகன், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago