சென்னை: தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசி, தமிழகத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் நேராது என உறுதி அளித்துள்ளார். வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து வாழும் மக்களே நம்மைவிட இதை அழுத்தமாக சொல்வார்கள்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் வட மாநிலப் பெண் ஒருவர் பேசியது, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது. ‘‘வாய் பேச முடியாத எனது குழந்தையை தூக்கிக் கொண்டு தமிழகத்துக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழகம்தான் காரணம்’’ என்று அவர் கூறியது யாராலும் மறக்க முடியாதது.
தாய் தமிழகம் என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
வர்த்தகம், தொழில், மருத்துவம், கல்வி, வேலை என பல்வேறு மாநில மக்கள் தமிழகம் வருவது காலம் காலமாக தொடர்கிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழகத்தையும் உயர்த்தி இருக்கின்றனர். சமீபகாலமாக வேலை வாய்ப்பு தேடி அனைத்து மாநில தொழிலாளர்களும் தமிழகத்துக்கு வருவது அதிகரித்து வருகிறது.
சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழகம் திகழ்வதுதான் இதற்கு காரணம். ‘தமிழகத்துக்கு சென்றால் வேலை கிடைக்கும். அமைதியான வாழ்க்கை அமையும்’ என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு காரணம்.
இவ்வாறு நம்பிக்கையோடு வரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகள், பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறது.
கரோனா 2-வது அலையின்போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பச் செல்ல விரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன.
சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் மாவட்ட ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன்.
குடும்ப அட்டை இல்லாத, வேலை இழந்த 1.29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு, பணிக் காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக 2021 ஏப்.1-ம் தேதி முதல் இதுவரை ரூ.6.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. இப்படி வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம்.
இந்த அமைதிமிகு சூழ்நிலையை காணப் பொறுக்காமல், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டும்என்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது.
இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழகத்தில் நடைபெற்றதாக வதந்தி பரப்பி, அச்சத்தையும், பீதியையும் பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள், இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து,இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்துக்குரியது.
யாரும் அச்சமடைய வேண்டாம்
எனவே, வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல்துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள்.
இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழக மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பிஹாரை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழகத்தில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது.
எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடும் செய்திகளை வெளியிட வேண்டும். செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம்.
பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதுதொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்து தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன். வளமான, அமைதியான தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago