மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி: ஈரோடு கிழக்கு முடிவு குறித்து கமல் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: "மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு எனது மனபூர்வமான பாராட்டுக்கள்" என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும், தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE