கரூர்: தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் 100 சதவீதம் நிறைவேற்றி முடிப்பார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் ராயனூரில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. அப்போது ரூ.114 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.52 கோடியில் முடிவுற்ற 23 பணிகளை தொடங்கி வைத்து, 1.22 லட்சம் பேருக்கு ரூ.267.43 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் தாத்தாவை போல முதல் முறையாக நீங்களும் போட்டியிட வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவேண்டும். திருவல்லிக்கேணியும் தாத்தா போட்டியிட்ட தொகுதிதான் என தெரிவித்து மறுத்து விட்டேன்.
முதல்வர் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். உங்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னெடுப்பால் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தில் 3,450 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். 7,071 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளன.
மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தில் தமிழகத்தில் 250 கோடி பயணங்களும், கரூர் மாவட்டத்தில் 31 கோடி பயணங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை சிற்றுண்டி திட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில் தற்போது இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை அரசுப் பள்ளியில் தான் சிற்றுண்டி சாப்பிட்டேன். சிற்றுண்டி நேரத்திற்கு வருகிறதா? தரமாக இருக்கிறதா? மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா? என ஆய்வு மேற்கொண்டேன். கரூர் மாவட்டத்தில் இன்று அரசுப் பள்ளியில் சாப்பிடலாம் என நினைத்தேன். பள்ளி விடுமுறை என்பதால் முடியவில்லை.
» வட மாநில தொழிலாளர்களின் இன்றைய நிலைக்கு திமுகவே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
» போலி கெளரவ டாக்டர் பட்டம் வழக்கு: விழா ஏற்பாட்டு அமைப்பு இயக்குநரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கல்வி, மருத்துவத்திற்கு அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. குறிப்பாக, பெண் கல்விக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். புதுமைப்பெண் திட்டத்தில் உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். என்றும் மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை கரூர் மாவட்டம் தந்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் முதல்வர் செய்து முடிப்பார். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையென்றால் என்னை தொடர்பு கொள்ளலாம். ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக இருந்து செய்துக் கொடுப்பேன்” என்றார்.
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது: ”அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யானை பலம் கொண்டவர். அதனை நினைவுகூரும் வகையிலே யானை உருவச்சிலையை பரிசாக வழங்கி இருக்கிறார்” என்றார். நிகழ்வை, மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத் வரவேற்று எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம், ரா.இளங்கோ, க.சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி நன்றி கூறினார். துணைமேயர் ப.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆங்கிலத்தில் உரையாற்றிய அரசுப் பள்ளி மாணவிகள் இருவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு 12 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். ஆட்சியர் த.பிரபுசங்கர் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதய நிதிஸ்டாலின் பங்கேற்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago