வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை - இந்தியில் பேசி கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு வீடியோக்களை யாரேனும் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தி மொழியில் பேசி வீடியோ வெளியிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரவி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் இந்தியில் பேசி, தனது சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் ஒரு வீடியோவை நேற்று (3-ம் தேதி) இரவு பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் எஸ்பி கூறியதாவது:- நான் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ் குமார் தாகூர் பேசுகிறேன். எங்கள் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலோ நடந்த வீடியோக்களை போட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை போன்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் நன்றாக உள்ளார்கள். அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. அவ்வாறு பரப்புபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்" இவ்வாறு அவர் எச்சரித்து உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE