குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் காலியாக உள்ள5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த பிப்.25-ம் தேதிதேர்வு நடைபெற்றது. குரூப் 2பிரதானத் தேர்வில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அலட்சியப் போக்கு: தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம், இத்தனை அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. “முற்பகல் தேர்வானது கட்டாயத்தமிழ் தகுதி தேர்வாகும்.

ஆகையால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது” என்றொரு விளக்கத்தைத் தேர்வாணையம் அளித்திருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

‘கட்டாயத் தமிழ் தேர்வு’ என்பது வெறும் ஒரு சடங்குதான், அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். திமுக அரசுத் தரப்பில் இருந்து, இதற்கு யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை. இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவதில்லை என்று தேர்வர்கள் வருத்தப்படுகின்றனர்.

குரூப் 4 தேர்வு முடிவு எப்போது? - அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள், 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று உறுதியளித்த திமுக அரசு, இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசுப் பணிதேர்வுகளுக்காக அயராது உழைத்து, தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு திமுக அரசு விளையாடிக் கொண்டிருக் கிறது.

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்து விட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE