திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு அசுர வளர்ச்சி பெறத் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாய குடும்பங்களை சேர்ந்த பலர் தங்களது உழைப்பை நம்பி திருப்பூருக்கு படையெடுத்தனர். ’வேலைக்கு ஆட்கள் தேவை’ எனும் பதாகைகள் வீதிதோறும் பெருக்கெடுக்க, தொழிலாளர்கள் தேவை அதிகரிக்கத் தொடங்கியது.
2005-ம் ஆண்டுக்கு பிறகு வடமாநிலத் தொழிலாளர்கள் வரத் தொடங்கினர். 2010-ம் ஆண்டுக்கு பிறகு, அதிக அளவில் வரத் தொடங்கினர். காஷ்மீரை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தொடங்கி இந்தியாவில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இங்கு தொழிலாளர்களாக தங்கள் வாழ்வை தொடர்கின்றனர். திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்களும், சுமார் 5 முதல் 6 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களும் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நிலையற்ற நூல் விலை, போட்டி நாடுகளுக்கு ஆர்டர் சென்றது, கரோனா, உலகளாவிய பொருளாதார தேக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சரிவை சந்தித்துள்ளது.
இதனால், பின்னலாடை தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை தர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியும் பரவியுள்ளது. இத்தகைய காரணங்களால் கடந்த சில வாரங்களாக திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது அதிகரித்துள்ளது.
தொழிலாளர்களின் அச்சம்: இதுதொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக எங்களுக்கு நிறுவனங்களில் தொடர்ச்சியாக வேலை இல்லாத சூழல் நிலவுகிறது. அதேபோல் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆபத்து என்ற தகவலும் பரவுவதால், தொழிலாளர்கள் மத்தியில் பீதி உள்ளது. அதே சமயம் பின்னலாடை நிறுவனங்களில் விடுதிகளில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களை, நிறுவனங்களே போதிய ஆர்டர் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன’’ என்றனர்.
பனியன் மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: வேலம்பாளையத்தில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆர்டர் இல்லாததால், வரும் வாரத்தில் 150 வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அதேபோல் பல நிறுவனங்கள் இன்றைக்கு ஆர்டர் இல்லாததால் இந்த நிலையை சந்தித்துள்ளன. அதாவது வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வேலை மட்டுமே இருப்பதால், அவர்களால் அதை சமாளிக்க முடிவதில்லை.
அதேபோல் விடுதியில் தங்க வைக்கப்படும் தொழிலாளர்களுக்கு உணவு, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதி உள்ளிட்டவற்றை நிறுவனங்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டியிருப்பதால் அதற்காக மாதம் ஒரு பெரிய தொகை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை இன்றைய சூழலில் நிறுவனங்கள் சமாளிப்பது என்பது கடினம். தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது.
அதேபோல் தொழிலில் பீஸ்ரேட் எனப்படும் ஒப்பந்த ஊழியர்களும், ஒப்பந்ததாரர்களும் அதிகரித்துவிட்டதால் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட எந்த தொழிலாளர் உரிமைகளும் கிடைப்பதில்லை.
மிகக் குறைந்த ஊதியம்: தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் கூட இன்றைக்கு ஒருநாள் ஊதியம் ரூ.281 கிடைக்கிறது. ஆனால் அதைவிட குறைவாகவே பனியன் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதால், இன்றைக்கு இந்த தொழிலில் இருந்து வெளியேறும் நெருக்கடி தொழிலாளர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த முறைப்படுத்துதல் சட்டப்படி எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்பது பெரும்பான்மை தொழிலாளர்களின் நிலையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது: சமீப நாட்களாக ’வாட்ஸ் அப்’ மூலமாக வட இந்தியர்களுக்கு எதிரான வதந்தி பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற சம்பவங்கள், திருப்பூரில் நடைபெறவில்லை. காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுபோன்ற வதந்தி பரப்புவோர் மற்றும் புகார்கள் குறித்த ஏதேனும் தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தின் புகார் மையத்துக்கோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அல்லது பணியாற்றும் நிறுவனத்தில் உள்ள பொது மேலாளரை அணுகி, மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். வடமாநிலத் தொழிலாளர்கள் விஷயத்தில் எந்த வதந்தியையும் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago