கோடைக் காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

By செய்திப்பிரிவு

கோவை: "4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின் விநியோகம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோடைக் காலத்தைப் பொறுத்தவரையில் மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது" என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கோவையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கோடைக் காலம் தொடங்கவுள்ளதால், மின் விநியோகம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் விநியோகம், கோடைக் காலத்தில் கூடுதலாக ஏற்படுகிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. 4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின் விநியோகம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கோடை காலத்தைப் பொறுத்தவரையில் மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் இதுதொடர்பாக தெடர்ந்து ஆய்வு செய்து, முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்" என்றார். புதிதாக சோலார் பிளான்ட் ஏதாவது அமைப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏற்கெனவே 6 ஆயிரம் மெகாவாட் அளவில் சோலார் உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் இப்போதுதான் கோரப் போகிறோம். டெண்டர் முடிந்தபிறகு, முதல்வர் மூலம் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கும்" என்றார்.

மேலும், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. ஏறத்தாழ 99.7 சதவீதம் இணைத்துவிட்டனர். இன்னும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே இணைக்காமல் உள்ளனர். அந்தப் பணிகளும் இன்னும் இரண்டொரு நாட்களில் முடியும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE