“டிக்கெட் இல்லையா... ஃபைன் கட்டுங்க...” - சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டும் கும்பல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பரிசோதனை என்று கூறி பயணிகளிடம் அபராதம் விதிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு சிலர் பயணச்சீட்டு பரிசோதகர் என்று தெரிவித்து, பயணிகளின் டிக்கெட்டுகளை சோதனை செய்து அபராதம் விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியே இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் முலம் உள்ளே செல்லும்போது, வெளியே வரும் போதும் பயணச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகிறது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ரயில் நிலையங்களில் உள்ள கட்டண வசூல் அறைகளில் மட்டுமே சரி செய்து தரப்படும். எனவே, தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் வழியாக மட்டுமே பயணச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகிறது. வேறு எந்த வகையிலும் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவது இல்லை.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும். இதுபோன்ற நபர்களை கண்டறிந்தால் நிலை கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இதுபோன்ற நபர்களிடம் மொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE