சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் அக்கட்சித் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் இபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொதுக்குழு கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே இதுகுறித்து முடிவெடுக்கும் என தெளிவுபடுத்தியிருந்தது.
இந்நிலையில், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவான பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், "கட்சியிலிருந்து நீக்கியது என்பது கட்சி கட்டுப்பாடுகளை மீறிய செயல். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
பொதுக்குழுவின் இந்த முடிவுகள் கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு விரோதமானது. எனவே, ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதம். கட்சியிலிருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. தங்களை நீக்குவது தொடர்பான எந்த விவாதப்பொருளும் பொதுக்குழுவில் இல்லை. இயற்கை நீதிக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது. உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 23ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, எனது நீக்கத்தை எதிர்த்து இந்த உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.பொதுக்குழு முடிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதால் பொதுக்குழு கூட்டுவதை எதிர்த்த வழக்கு செல்லாதது என எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனால் தீர்மானங்களை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படி, கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
2021 டிசம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, அந்த பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர தீர்மானம் கொண்டு வந்தது சட்டவிரோதமானது. கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமை விரும்புவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே கட்சியில் இருந்து தங்களை நீக்கிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், சி.எஸ்.வைத்தியநாதன் அகியோர், "கடந்த 9 மாதங்களாக இதே வாதங்களைத்தான் ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவும், பதிலளிக்கவும் 2 வார கால அவகாசம் வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில், "இடைக்கால பொதுச் செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அறிவிக்க உள்ளது. அதிமுக உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் வாதங்களை கேட்காமல் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, எதிர் மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. தீர்மானங்கள் மீது தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பு விளக்கங்களை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த மனு குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை, மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago