சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டும்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: காலநிலை மாற்றம் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கத்தை தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று (பிப்.3) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"காலத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் மகத்தான பணியாற்ற வேண்டிய பொறுப்புணர்வோடு இந்தக் கூட்டத்தை நாம் இங்கே நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நான் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதும், பத்திரிக்கைகளின் பக்கங்களைப் புரட்டும் போதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்து கவலைப்படுவதுண்டு. மனித குலத்திற்கு மட்டுமின்றி - உயிரினங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு விதத்திலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மீது ஆழ்ந்த சிந்தனை எப்போதும் எனக்கு உண்டு.

அதனால்தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல குழுக்களை அமைத்த போது, காலநிலை மாற்றம் பற்றி ஆய்வு செய்யவும், ஆலோசனை வழங்கவும் இந்தக் குழுவினை அமைத்தேன். தமிழ்நாடு இப்படியொரு குழுவினை அமைத்தது என்றால் ஓராண்டு கழித்து, இந்தியாவே ஜி-20 மாநாட்டிற்கு தலைவர் பதவியை ஏற்றுள்ளது. இன்றைக்கு வட துருவத்தில் உள்ள புகழ்பெற்ற வெனிஸ் நகரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை சந்தித்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற அந்த நகரத்தில், நீர் வாய்க்கால்கள் தண்ணீர் இல்லாமல் சோகமே உருவாக நிற்கிறது. நியூஸிலாந்து நாடு கேப்ரியெல்லா புயலால் பேரழிவைச் சந்தித்து வருகிறது. உலகெங்கிலும் இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் நடைபெறும் பின்னணியில்தான் இன்று தமிழ்நாடு அரசின் காலநிலை நிர்வாக குழுவின் முதல் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர்கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36வது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு. இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன். பிப்ரவரியில் இந்த தரவுகள் வெளியாவதற்கு முன்பே அதாவது கடந்த டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் சென்னையைக் கடந்துகொண்டிருந்த வேளையில்தான் நான் தமிழ்நாட்டின் "காலநிலை இயக்கத்தையும்" காலநிலை உச்சி மாநாட்டையும் துவக்கிவைத்தேன். நான் ஏன் இந்த நிகழ்வுகளை குறிப்பிடுகிறேன் என்றால், இந்த நிர்வாகக் குழுவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மட்டுமல்ல, இந்த அரசு வருமுன் காக்கக்கூடிய அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்கும்தான்.

அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை எனத் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப 47 வகையான நீர்நிலைகள் இருந்த வளமான அறிவுச் சமூகம்தான் தொன்மையான தமிழ்ச் சமூகம். வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான், என்று என்னைப் போன்ற நிர்வாகிகளுக்கு உயர்வின் ரகசியத்தை தமிழ் மூதாட்டி அவ்வையார் சொல்லியிருக்கிறார். அதன் வழி நின்றுதான், இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், தகவமைத்துக்கொள்ளவும், விரைவாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், துறையின் பெயரை "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று அறிவித்ததோடு நின்றுவிடாமல், தமிழ்நாட்டிற்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்து, நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இந்தியாவிற்கே முன்மாதிரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கிவைத்தேன். இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன என்பதை இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு, கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.

பொதுவாக, வெப்பமண்டல நாடுகளில் உள்ள காலநிலையையும், பருவங்களையும் கணிப்பது கடினம். அதுவும் குறிப்பாக சர்வதேச வானிலை மாதிரிகளால் இந்த பகுதிக்கென பிரத்தியேகமாக உள்ள விஷயங்களை கணிப்பது மிகவும் கடினம். இதற்காகவே அண்ணா பல்கலைக் கழகத்தில் "காலநிலை ஸ்டூடியோ" செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவமான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக (Climate Resilient villages) மாற்றுவதற்கான திட்டம் இன்று துவக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" (Climate literacy) செயல்படுத்தப்போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தைப் பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பல்லுயிரியத்தைப் பாதுகாப்பதென்பது இந்த அரசின் முக்கியமான கடமையாகக் கருதுகிறோம். இதை இன்றைய தலைமுறையினருக்காக மட்டும் செய்யவில்லை. எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்தித்தான் இந்த அரசு இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13-ஆக உயர்த்தியுள்ளோம். இதைத் தவிர, அருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க சரணாலயங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக "Tamil Nadu Green Climate Company" உருவாக்கப்பட்டு இவற்றை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச்செல்லவேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத, ஏன், மத்திய அரசுகூட உருவாக்காத "காலநிலை மாற்ற நிர்வாகக் குழு" எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழுதான் தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகிறது. அரசு இயந்திரம், வளர்ச்சி என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு செல்லும். அதனை வழிகாட்ட, செழுமைப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த நிர்வாகக் குழுவிற்கு உள்ளது.

நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அந்த வளர்ச்சி வளங்குன்றா, நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தேவை. அதற்கான பாதையை இந்தக் குழு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று துறை அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் மனிதநலன் என்ற ஒன்றே கிடையாது என்பதை உணர்ந்து கொண்டுதான் இந்த திராவிட மாடல் அரசு "ஒருங்கிணைந்த நலன்" (One Health) என்கிற கொள்கையை உறுதியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.

இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதனை இந்தக் குழு அல்லது இந்தக் குழு அமைக்கும் துணைக் குழுக்களோ ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லப்படும் 2070-ஆம் ஆண்டுக்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் சிறந்த கருத்தியல் அறிஞர்களாக அறியப்பட்டவர்கள், 'அரசை எப்படி காப்பாற்றுவது, நாட்டை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில், தமிழ் நிலப்பரப்பில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலைப் பற்றி வள்ளுவர் பேசியிருக்கிறார். உலகுக்கு வழிகாட்டிய அவர் அடியொற்றி, தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்து, அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இது தமிழ்நாடு அரசு மட்டும் செய்யக்கூடிய வேலையல்ல, ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த துறை அமைச்சர், அதிகாரிகள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்." என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்