ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி; திமுக, காங். அலுவலகங்களில் உற்சாகம்: பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, காங்கிரஸ் முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கியதுமே, அண்ணா அறிவாலயம் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை 9 மணி முதலே முன்னணி நிலவரம் வெளியாகியது. அதிமுக வேட்பாளரைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ளதிமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவியத் தொடங்கினர். மேலும், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்த சுற்று நிலவரத்தில் வெற்றி வித்தியாசம் அதிகரித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவாலயம் வந்தார்.

இதேபோல, காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் தொண்டர்கள் வரத் தொடங்கினர். காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.

அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தங்கியிருந்த, நுங்கம்பாக்கம் ஓட்டல் முன்பும் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE