புதுச்சேரி | அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மக்கள் மருந்தகம் - ஆளுநர் தமிழிசை தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.

இந்த மக்கள் மருந்தகங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டு 4-வது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் மருந்தியல் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமலு, மருந்து கட்டுப்பாட்டு துறை மருத்துவர் அனந்தகிருஷ்ணன் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதனை கொண்டாட்டம் என்று சொல்வதைவிட மக்களின் திண்டாட்டத்தை போக்குகின்ற ஒரு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். வசதி படைத்தவர்கள் மருந்துகளை பொதுவான மருந்து கடைகளில் வாங்கி கொள்ளலாம். ஆனால் சாமானிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த மக்கள் மருந்தகம்.

ஜெனரிக், பிராண்டட் மருந்துகள் என்று நாம் சொல்வோம். அடிப்படை ஒரே மருந்துதான். இதனை பெரிய நிறுவனங்கள் வேறு வேறு பெயர்களை வைத்து அதற்கு ஏற்றார்போல் விலையை நிர்ணயம் செய்து விற்பார்கள். மருந்துகள் விலை குறைவாக கிடைக்கிறது என்பதால் மக்கள் பலன்தராதோ என்று நினைக்கக்கூடாது. மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்ற மருந்துகள் வீரியம் மிகுந்த, சிகிச்சைக்கு உகந்த மருந்துகள். சர்க்கரை அளவை பரிசோதிக்கும் குளுக்கோ மீட்டர் வெளியே ரூ.1,700-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-க்கும் மேல் கிடைக்கிறது. ஆனால் மக்கள் மருந்தகத்தில் ரூ.500-க்கு கிடைக்கிறது.

அதேபோன்று புரோட்டின் பவுடர் ரூ.700 முதல் ரூ.750 வரை கிடைக்கிறது. ஆனால் இங்கு ரூ.170 முதல் ரூ.250 வரை கிடைக்கிறது. ரத்த அழுத்த மாத்திரைகள் பொது மருந்தகத்தில் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. அது மக்கள் மருந்தகத்தில் ரூ.5-க்கு கிடைக்கிறது. மக்கள் மருந்தகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு மிச்சப்படுத்தும் பணத்தை வைத்து நல்ல உணவை சாப்பிட வேண்டும். மக்கள் தேவையின்றி மருந்துகளுக்கு செயவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் எண்ணத்தில் உதித்த மாபெரும் திட்டம்.

ஜிப்மர் மருத்துவமனையில் சாமானிய மக்கள் மருந்து வாங்க சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும். எனவே அங்கு ஏற்கனவே மக்கள் மருந்தகம் வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து, இயக்குநரிடம் சொல்லியிருந்தோம். அதற்கான அடிப்படை வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இன்னும், மூன்று வாரங்களில் திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆகவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகம் திறக்கப்படும். புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார மையங்களில் ஏற்கனவே இலவச மருந்துகள் கொடுக்கின்றோம்.

ஆனால் அதையும் தாண்டி சில சிறப்பு மருத்துவத்துக்கு சிறப்பு மருந்துகள் தேவைப்படும். எனவே எங்கெல்லாம் ஆரம்ப சுகாதார மையங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் மருந்தகம் திறக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலரிடம் கூறியுள்ளேன்.

பிரதமர் சுகாதாரத்துறையில் மிகுந்த நாட்டம் கொண்டு நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு திட்டம் தான் இந்த மக்கள் மருந்தக திட்டம். அதுமட்டுமின்று மூட்டுவலிக்கான சிகிச்சை முன்பு வசதி படைத்தவர்கள் தான் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது சாமானிய மக்களும் சிகிச்சை பெறும் வகையில் 60 சதவீதம் அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டென்ட் டியூப்பின் விலை லட்சக்கணக்கில் இருந்தது. அது இப்போது ரூ.40 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. ஆகவே எல்லா விதத்திலும் சிகிச்சை வசதிப்படைத்தவர்களுக்கு மட்டுமல்ல சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கான இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி. எனவே மக்கள் இதில் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE