39 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டசபைக்கு செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன் 

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 39 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே, கடந்த 1996, 2004, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிருந்த அவர், 2004ல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்தார்.

அதேபோல், 1984ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக வேட்பாளர் டி.கே.சுப்ரமணியத்தை விட 25 ஆயிரத்து 719 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார்.

கடந்த 1989ம் ஆண்டு பவானிசாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்ததேர்தலில் தோல்வியை தழுவி இருந்தார். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.கே.சின்னசாமி வெற்றி பெற்றிருந்தார்.

கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், நடந்தமுடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை வென்று மீண்டும் தமிழக சட்டசைபைக்கு செல்லவிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE