ஈரோடு இடைத்தேர்தல் | ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை: ஜி.கே.வாசன்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றும் பணநாயக முறையில்தான் தேர்தல் நடைபெற்றது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் விமர்சித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், “ஈரோடு தேர்தல் முடிவு வந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் குறித்து தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக முறையில்தான் நடைபெற்றது.

மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும். கியாஸ் விலை உயர்ந்திருப்பது பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். கியாஸ் மானியம் தருவதாக தி.மு.க.தேர்தல் வாக்குறுதி அளித்ததை தற்போது நிறைவேற்ற வேண்டும். கியாஸ் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அவரது உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE