இந்த வெற்றி முதல்வரைச் சேரும் | ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பதில் பெருமை: ஈவிகேஎஸ் இளங்கோவன் 

By செய்திப்பிரிவு

சென்னை: இடைத் தேர்தல் வெற்றி முதல்வரைச் சேரும் என்றும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக உள்ளது என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதையடுத்து, திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இந்த வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். அவரைத்தான் இந்த வெற்றி சேரும். 80 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். இதற்கு அங்கீகாரமாகத் தான் இந்த வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். ராகுல் காந்தியின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.

ஈரோட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் முதல்வரை சந்தித்து விரைவில் நிறைவேற்றுவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப் பேரவையில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும், அனுபவத்திலும், செயல்திறனிலும் பன் மடங்கு உயர்ந்தவர். அவருடன் பேரவையில் நெருக்கமாக இருக்க கூடிய நிலையை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். அமைச்சர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு உழைத்தார்களா என தெரியவில்லை. கடுமையாக உழைத்தார்கள். காலை, மாலை என வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

பெரிய வெற்றிதான் என்றாலும், அதை கொண்டாடும் மனநிலை தான் இல்லை. மகன் விட்டுச் சென்ற பணியை செய்ய வேண்டும் என்ற மன நிலையில் தான் உள்ளேன். ஈரோடு மக்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் என்னிடம் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE