ஈரோடு இடைத்தேர்தல் | 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்? - தேர்தல் அலுவலர் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ள நிலையில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. .

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதன்படி 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 23,416 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,786 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 1,598 வாக்குகளும், தேமுதிக 159 வாக்குகளும் பெற்றுள்ளன.

இந்நிலையில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், "தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை சரிபார்த்து முதல் சுற்று முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். முதல் சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தற்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் இதை கண்காணித்து வருகின்றனர். வெளிப்படைத் தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்படும். மேலும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்படும். இதை தொடர்ந்து 3வது சுற்று தொடங்கும்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE